ஆண்களுடன் கைகுலுக்க மறுத்த முஸ்லிம் பெண்!


ஆண்களுடன் கைகுலுக்க மறுத்த முஸ்லிம் பெண்
தடையை எதிர்த்து வழக்குப்போட்டு வெற்றி பெற்றார்



ஆர்ம்ஸ்டர்டாமில் உள்ள ஒரு ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்ந்த முஸ்லிம் பெண், ஆண்களின் கைகளை குலுக்க மறுத்து விட்டார். இதனால் பயிற்சிக் கல்லூரி அவரைச் சேர்ப்பதற்கு தடை விதித்து விட்டது. இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த அவர் அதில் வெற்றி பெற்றார்.

20 வயது பாத்திமா

நெதர்லாந்து நாட்டில் வசிக்கும் பெண் பாத்திமா அம்கர். 20 வயதான இவர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேருவதற்காக மனு செய்து இருந்தார்.இதற்கான நேர்முகத்தேர்வுக்கு அவர் அழைக்கப்பட்டு இருந்தார். அப்போது அவரை நேர்முகத் தேர்வு செய்ய இருந்த ஆசிரியர்கள் கைகுலுக்குவதற்காக கையை நீட்டியபோது கைகொடுக்க மறுத்து விட்டார்.

மதக்கட்டுப்பாடு

12 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுடன் எந்தவிதமான ஸ்பரிசத் தொடர்பும் கொள்ளக்கூடாது என்பது இஸ்லாமிய மதக் கட்டுப்பாடு என்று பாத்திமா அதற்கு விளக்கமும் கொடுத்தார்.

இதை கல்லூரி நிர்வாகம் ஏற்க மறுத்து விட்டது. கைகுலுக்குவது டச்சு சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரியாதை தெரிவிக்கும் அடையாளம் ஆகும் என்று கூறிய நிர்வாகம், அவரைச் சேர்ப்பதற்கு தடைவிதித்தது.

கோர்ட்டில் வழக்கு
இதை எதிர்த்து பாத்திமா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சமமாக நடத்தும் கமிஷன் தடை விதித்ததன் மூலம் பாத்திமாவுக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது என்று கூறி பாத்திமாவை கல்லூரியில் சேர்த்துக் கொள்ள உத்தரவிட்டு உள்ளது.

ஒதுக்கும் ஆபத்து

முஸ்லிம்களின் நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் சமுதாயத்தில் இருந்து முஸ்லிம் பெண்களை ஒதுக்கி வைக்கும் ஆபத்தை கல்வி நிலையங்கள் ஏற்படுத்தி விடும் என்றும் கமிஷன் எச்சரித்தது.

இதே கமிஷன் தான் கடந்த ஆண்டு தலையில் முக்காடு போட்டுக்கொண்டு வர மறுத்த முஸ்லிம் பெண் சமீராவை ஆசிரியராகச் சேர்க்க மறுத்த இஸ்லாமிய பள்ளிக்கூடத்துக்கு எதிராக தீர்ப்பு கூறியது.
 

islamnewsbook web Copyright © 2009 Template is Designed by alaudeen