பவுல்(பால்) எவ்வாறு கிறித்துவை கடவுளாக்கினார்?-1

//ஓர் உதவி. முன்பு ஒரு இஸ்லாமியப் பதிவர் பால் எப்படி கிறித்துவத்தை திசை மாற்றினார் என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். paul made jesus into a mythic character.

இதன் நகல் கிடைக்குமா?//-Dharumy

எனது முந்தய பதிவில் தருமி சார் கேட்டதின் நகல் என்னிடம் இல்லையாதலால்
இது சம்பந்தமாக நான் படித்ததை தனி பதிவாக போடுகிறேன் என்று சொல்லியிருந்தேன். அதன்படி டாக்டர் மாரிஸ் புகைலின் 'விஞ்ஞான ஒளியில் பைபிளும் குர்ஆனும்' என்ற புத்தகத்தில் உள்ள செய்திகளை அப்படியே தருகிறேன் பலரும் விளங்கிக் கொள்வதற்காக.

டாக்டர் மாரிஸ் புகைல்: பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த இந்த டாக்டர் உடற்கூறு சிகிச்சை வைத்தியத்தில் கை தேர்ந்தவர்.மனிதர்களின் உடல்களை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தவருக்கு அந்த மனிதனின் ஆன்மா பற்றிய சிந்தனை எழுந்து விட்டது. அது பற்றி ஆராயத் தொடங்கி உலக மதங்களின் வேதங்களை ஆராயத் தொடங்கினார். அந்த வகையில் கிறித்துவின் வாழ்வில் எந்த அளவு உண்மை மறைக்கப் பட்டுள்ளது என்பதை அதில் பவுலின் பங்கு எந்த அளவு என்பதை இப்புத்தகத்தில் விரிவாக விளக்கியுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.

பழைய ஏற்பாட்டை எழுதியது யார்?

இக் கேள்வி பலருக்கும் ஆச்சரியத்தை விளைவிக்கலாம். ஒரு சிலர் விவிலிய வேதமான பைபிளின் முன்னுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவலை நம்மிடம் திருப்பிக் கூறுவர். இந்நூல்கள் மனிதர்களினால் எழுதப்பட்ட போதிலும் பரிசுத்த ஆவியினால் தூண்டப்பட்டு கோர்வை செய்யப்பட்டனவாகும் என்றும் எனவே இறைவனே இந்நூலின் ஆசிரியர் என்றும் அவர்கள் சொல்லக் கூடும்.

ஏசு நாதர் இறந்து நானூறு ஆண்டுகளுக்குப் பின்னர் திருச்சபை ஒரு பட்டியலைத் தயாரித்து இதில் அடங்கியுள்ள நூல்களே வேத நூல்கள் என பொது அறிவிப்புச் செய்தது. இந்தப் பட்டியலை கி.பி.1441 ஆம ஆண்டு பிளாரன்ஸில் கூடிய திருச்சபையும் 1546 ஆம் ஆண்டில் டிரென்டில் கூடிய திருச்சபையும் 1870 ஆம் ஆண்டில் கூட்டப்பட்ட முதலாவது வாடிகன் கவுன்சிலும் அங்கீகாரம் செய்து வந்துள்ளன. அந்தப் பட்டியல்தான் 'கேனான்' என்றழைக்கப்படும் வேத நூல் தொகுப்பாக இன்றளவும் இருந்து வருகிறது.

இரண்டாவது வாடிகன் கவுன்ஸில் 1962 ஆம ஆண்டு முதல் 1965 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தாற்போல் மூன்று ஆண்டுகள் கலந்தாலோசனை நடத்திய பிறகு பைபிளின் புதிய வெளியீட்டைக் கொண்டு வந்திருக்கிறது. ஒரு பாமரன் மேலெழுந்தவாரியாக இதைப் படிக்கும் போது இந்த வேதங்கள் செவ்வனே பாதுகாக்கப்பட்டுத்தான் வந்திருக்கின்றன என நம்பி விடுவான். இது குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இலேசில் எழாது.

என்றாலும் குருமார்களில் ஓரிருவர் இத்துறையில் ஆராய்ச்சிகள் செய்யாமல் இல்லை. அவர்கள் தங்களின் கண்டுபிடிப்புகளைத் தொகுத்து வைத்திருக்கின்றனர். அவை பொது மக்களின் பார்வைக்கு கொண்டு வரப் படுவதில்லை. அவை பல நூல் நிலையங்களில் மூலைகளில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.

அவற்றில் ஒன்று பேராசியர் எட்மண்ட் ஜாக்கப் பிரெஞ்சு மொழியில் எழுதிய 'பழைய ஏற்பாடு' என்ற நூலாகும். அந்நூலில் அவர் கூறியிருப்பதாவது:

'வேதங்கள் என்று சொல்லப்படுபவற்றில் ஆதி காலங்களில் பல வாய் மொழிகள் வழக்கில் இருந்து வந்தன. ஒரே மாதிரியான வாய் மொழிதான் இருந்து வந்தது எனச் சொல்ல முடியாது. பல்வேறு வாக்கு மூலங்கள் மக்களிடையே புழக்கத்தில் இருந்தன.நாளாக நாளாக அவை எழுத்து வடிவம் பெறலாயின. அதிலும் பல பிரிவுகள் வழக்கில் இருந்தன. இறுதியாக மூன்று வகையான வேத நூல்கள் ஹீப்ரு மொழியில் உருவாயின. ஏசு பிறப்பதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் உள்ள நிலவரம் இது. இந்த மூன்று வேறுபட்ட நூல்களில் இருந்தும் உருவாக்கப்பட்டதே யூதர்கள் இன்று அழைக்கும் பென்டாடெஷ் என்ற தொகுப்பாகும். இதைத்தான் அவர்கள் 'தௌராத் வேதம்' என்கிறார்கள். மேற் கூரிய மூன்று ஹீப்ரோ மொழிகளில் இருந்து பல பகுதிகள் கிரேக்க மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. இவையே பின்னால் உருவான பைபிள்களுக்குக் கருவாக அமைந்தன. மூன்று விதமான வேத நூல்களையும் ஒன்றாகத் தொகுத்து ஒன்று படுத்தும் முயற்சி ஏசு பிறப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை நடந்து வந்தது. இருப்பினும் ஏசு பிறந்து ஒரு நூற்றாண்டு கழிந்த பின்னரே பைபிளுக்குரிய கருப் பொருள்கள் ஒன்று திரட்டப்பட்டன.”

மேற் கூரிய கருத்துக்கள் பேராசிரியர் எட்மண்ட் ஜேக்கப் அவர்களுடைய நீண்ட ஆராய்ச்சிகளின் விளைவுகளாகும்.

மூன்று வகையான வேத நூல்கள் ஹீப்ரு மொழியில் வழக்கில் இருந்திருக்கின்றன. அவை அப்படியே பாதுகாக்கப்பட்டு வந்திருக்குமாயின் இன்று நாம் அவைகளை ஒன்றுடன ஒன்று ஒப்பிட்டுப் பார்த்து உண்மையை உய்த்து உணர்வதற்கு உதவியாக இருந்திருக்கும். துரதிர்ஷ்டவசமாக அவை குறித்து ஒரு துப்புக் கூட இன்று கிடைக்கவில்லை.

பழைய ஏற்பாடு முதன் முதலாக முழுமையாக கிரேக்க மொழியில் கி.மு.மூன்றாவது நூற்றாண்டில் மொழி பெயர்க்கப்பட்டது. அலெக்சாண்டிரியாவில் வாழ்ந்த யூதர்களே இப்பணியைச் செய்து முடித்திருக்கிறார்கள். இந்த கிரேக்க மொழி பெயர்ப்புதான் பிற் காலத்தில் உருவான புதிய ஏற்பாட்டிற்கு மூலமாக அமைந்தது. கி.பி.ஏழாவது நூற்றாண்டு வரை இந்த 'பழைய ஏற்பாடு' அப்படியே பாதுகாக்கப்பட்டிருந்தது.

ஆனால் செயின்ட் ஜெரோம் என்ற மத குரு கி.பி.ஐந்தாவது நூற்றாண்டில் ஹீப்ரு மூல நூல்களில் இருந்து லத்தீன் மொழியில் ஒரு பைபிளைத் தயாரித்தார். இதுவே உல்மேட் என்று அழைக்கப்படுகிறது. செயின்ட் ஜெரோம் தயாரித்த பைபிளே கிறித்தவ உலகத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு பரவலாக வழக்கில் இருந்து வருகிறது. லத்தீன் மொழி பெயர்ப்பு அல்லாமல் அராமிக் மொழியிலும், சிரியாக் மொழியிலும், பைபிள்கள் வெளி வந்தும் இருக்கின்றன.

எனவே ஹீப்ரு, கிரேக்கம், லத்தீன் சிரியாக், அராமிக்,அரபி ஆகிய பல மொழிகளில் விவிலிய வேதம் வழக்கில் இருந்தபோது சில ஆராய்ச்சியாளர்கள் எல்லா நூல்களில் இருந்தும் அவர்களது யுக்திக்கு ஏற்ற வகையில் அங்கிருந்து கொஞ்சம், இங்கிருந்து கொஞ்சம் என்ற முறையில் பல விஷயங்களையும் ஒன்று திரட்டி புதிய பைபிள்களைத் தயாரிக்கலானார்கள். அம் மாதிரித் தயாரிப்புத்தான் 1957 ஆம் ஆண்டு லண்டன் நகரில் அச்சிடப்பட்ட வால்டன் பைபிள் என்பதாகும்.

கிறித்தவர்களுக்குள்ளேயே பலவித உட்பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டுள்ள பைபிள்கள் பல மாதிரியானதாகவிருக்கும். வார்த்தை வித்தியாசம், கருத்து வித்தியாசங்கள் உண்டு. பல்வேறு கிறித்தவ பிரிவுகளும் இன்று ஒன்று கூடி ஒரே மாதிரியான பைபிளைத் தயாரிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். கத்தோலிக்கப் பாதிரிகளும், புரோட்டஸ்ட் பாதிரிகளும் கூட்டாக முயற்ச்சித்து இறுதியில் அதில் வெற்றியும் கண்டு விட்டனர். அவர்களது புதிய தயாரிப்புக்கு (The Ecumencial Translation Of The Old Testament) எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. 1975 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்நூல் வெளியிடப்பட்டு விட்டது.

மேலே கூறியவற்றில் இருந்து இன்று வழக்கில் இருக்கும் பழைய ஏற்பாடு என்ற வேதநூல் எப்படி உருவாயிற்று என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். மனிதக் கரம் இதில் அதிகமதிகம் விளையாடி இருக்கிறது. சுமார் இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றில் ஒவ்வொரு தடவை புதிய பதிப்பு தயாரிக்கும் பொழுதெல்லாம் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மொழி பெயர்ப்பிலும் வாசகங்கள் கூட்டிக் குறைக்கப்பட்டிருக்கின்றன. காலா காலமாக இந்தத் 'திருத்தும் வேலை' நடந்தே வந்திருக்கிறது.

குறிப்பு: இஸ்லாத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் முகமது நபியின் போதனைக்கு மாற்றமாக இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளில் எல்லாம் ஊருக்கு ஊர் தர்ஹாக்களைக் கட்டி வைத்து அந்த மகான்களை இறைவனுக்கு சமமாக வழிபடுவதையும் பார்க்கிறோம். அதே போல் ருக்,யஜூர்,சாம,அதர்வண வேதங்கள் உருவ வழிபாட்டைப் போதிக்கவில்லை. சித்தர்கள் கூட 'நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்' என்று உருவ வழிபாட்டைக் கண்டிக்கிறார். திருக்குறளிலும் உருவ வழிபாட்டைப் பற்றி சொல்லவில்லை. ஆனால் இந்து மதம் இன்று முழுக்க முழுக்க உருவ வழிபாட்டையே அடிப்படையாகக் கொண்டு இயங்கும் காட்சியையும் பார்க்கிறோம். இவை எல்லாம் வேத நூல்கள் ஒன்றைச் சொல்ல காலப் போக்கில் மனிதனின் மனம் அந்த வேதக்கருத்துக்களையே மாற்றி அதற்கு எதிரான திசையில் செல்ல ஆரம்பித்து விடுகிறது. இது எல்லா மதத்துக்கும் பொருந்தும். எனவே இப்பதிவு அந்த தவறுகளை சுட்டிக் காட்டத்தானே யொழிய யார் மனத்தையும் புண்படுத்தும் நோக்கம் கண்டிப்பாக இல்லை என்றும் சொல்லிக் கொள்கிறேன்.
 

islamnewsbook web Copyright © 2009 Template is Designed by alaudeen