பவுல்(பால்) எவ்வாறு கிறித்துவை கடவுளாக்கினார்?-2

ஏசுவுக்குப் பின்னர் அவருடன் வாழ்ந்த சிஷ்யர்கள்(அப்போஸ்தலர்கள்) தங்களை ஒரு சிறு கூட்டமாக அமைத்துக் கொண்டு ஏசு அவர்கள் கொண்டு வந்த போதனையைப் பரப்பலாயினர். யூதர்களுடைய பழக்க வழக்கங்களையே அந்த அப்போஸ்தலர்களும் கடைபிடித்து வந்தனர்.
யூத கோவில்களில் நடைபெறும் வணக்க முறைகளையே இவர்களும் பின்பற்றி வந்தனர்.

அப்போஸ்தலர்களின் பிரச்சாரங்களின் விளைவாக பலரும் கிறித்தவ மார்க்கத்தின்பால் ஈர்க்கப்பட்டனர். ஒரு மார்க்கத்தையும் சேர்ந்திராது காட்டுமிராண்டி வாழ்க்கை நடத்தி வந்த பாமர மக்களும் ஏசுவின் போதனையின் பக்கம் திரும்பலாயினர். இப்படிப் புதிதாக கிறித்தவ மார்க்கத்தில் சேர்ந்தவர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டன. இந்த சலுகை பவுல் மற்றும் அவரைச் சார்ந்தவர்களால் வழங்கப்பட்டது. புதிதாக கிறித்தவ மார்க்கத்தில் இணைபவர்கள் விருத்த சேதனம்(சுன்னத்) செய்து கொள்ளத் தேவையில்லை என்றும், வணக்க முறைகளில் சில விதிகள் அவர்களுக்காகத் தளர்த்தப்படலாம் என்றும் பவுல் கருதினார். யூதர்களைப் போன்று பல அனுஷ்டானங்களை அப்போஸ்தலர்கள் கடைபிடித்து வந்தனர். ஆனால் புதிதாக கிறித்தவ மார்க்கத்திற்கு வந்தவர்கள் இவற்றை எல்லாம் கடை பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என பவுல் வாதிக்கலானார்.

ஆக இப்படியாக ஈஸா நபி(ஏசு) மரித்து ஒரு நூற்றாண்டுகளுக்குள்ளாக இரண்டு கோஷ்டிகள் கிறித்தவ மார்க்கத்தில் தோன்றி அலை மோதின. ஏசு நாதரோடு கூடவே இருந்த அப்போஸ்தலர்கள் காட்டிய வழியில் செல்லும் கூட்டம் ஒன்று. இவர்கள் பெரும்பாலும் யூத பழக்க வழக்கங்களையே அனுஷ்டித்து வந்தனர். மற்றொன்று பவுல்(பால்) தலைமையில் இயங்கிய கூட்டம். யூத பழக்க வழக்கங்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டியதில்லை என்றும் புதிதாக மார்க்கத்தில் வருகின்றவர்கள் விஷயத்தில் அதிக கண்டிப்பு அவசியமில்லை என்றும் இவர்கள் கருதினார்கள். விருத்த சேதனம், ஓய்வு நாள், யூத வணக்க முறை, பலி(குர்பானி), பன்றி இறைச்சியை விலக்குதல் ஆகிய பிரச்னைகள் குறித்து இரு கூட்டத்தினருக்குமிடையே பலத்த மோதல்கள் எழுந்தன.

ஏசுவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் அப்போஸ்தலர்களுடன் சேர்ந்து ஏசு கடைபிடித்த பழக்க வழக்கங்களையே பின் பற்ற வேண்டும் என்று கூறினர். இக் கூட்டத்தினர் பவுலை 'விரோதி' என அழைத்தனர். ஏசு மரித்து 70 ஆண்டுகள் வரை இக்கூட்டமே (ஜூதியோ கிறிஸ்டியானிடி) பெரும்பான்மையாக இருந்தனர். ஆரம்பத்தில் பீட்டரும் யோவானும் கூட இக் கூட்டத்தினருடன்தான் இருந்தனர். ஏசுவின் சொந்தமான ஜேம்ஸ் என்பவர் இக் கூட்டத்தின் தலைவராக இருந்தார். அவருக்குப் பின் ஏசுவின் மற்றொரு சொந்தமான கிளியோபாஸ் தலைமை ஏற்று நடத்திச் சென்றார். யூத-கிறித்தவர்கள் என இக்கூட்டம் அழைக்கப்பட்டது.

யூத-கிறித்தவர்களான இவ்வமைப்பினரே முதன்முதலாக சுவிசேஷங்களை ஹீப்ரு மொழியில் எழுதலானார்கள். கிறித்தவ மார்க்கத்தைப் பற்றிய பல நூல்களையும் அவர்கள் தொகுக்கலானார்கள். ஏசு மறைந்து ஒரு நூற்றாண்டு வரை இவர்களது கையே மேலோங்கி இருந்தது. ஜெருஸலம், பாலஸ்தீனம் மட்டுமல்லாது எகிப்து ரோம் வரை கூட இவர்களது ஆதிக்கம் பரவி இருந்தது. அதனால்தான் பவுல் எழுதிய நிரூபங்களில் 'மோதல்கள்' பற்றி அதிகம் குறிப்பிடுகிறார். கலாத்தியா, கோரிந்த், கோலோசேயா, ரோம், தெசலோனியா ஆகிய இடங்களில் எல்லாம் பவுல் எதிர்ப்பை சமாளிக்க வேண்டியிருந்தது.

சிரியாவிலும் ஆசியா மைனரிலும் யூத-கிறித்தவர்களின் கூட்டமே மிகைத்திருந்தது. கிரேக்க நாட்டிலும் இவர்களின் பிரச்சாரமே மேலோங்கி இருந்தது. ஆப்ரிக்க கண்டத்திற்கு கிறித்தவ மார்க்கத்தை முதன் முதலில் எடுத்துச் சென்றதே இக் கூட்டம்தான். முதன்முதலாக சுவிசேஷங்களை எழுத ஆரம்பித்ததும் இவர்களே.

இத்தகைய பின்னணியில்தான் மற்ற சுவிசேஷங்கள் எழுதப்படலாயின. எதிரி கோஷ்டியின் பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் எழுதப்பட்டவையே இன்று வழக்கில் இருந்து வரும் சுவிசேஷங்கள் ஆகும். கி.பி.70 ஆம் ஆண்டிலிருந்து சுவிசேஷப் போராட்டங்கள் ஆரம்பமாயின. யூதக்-கிறித்தவர்கள் யூதர்களில் ஒரு உட்பிரிவுதான் என்றும் பவுல் கோஷ்டியினர் பிரச்சாரம் செய்யலானார்கள்.

ஆனால் கி.பி. 70 ஆம் ஆண்டில் இருந்து நிலைமை மாறலாயிற்று. அப்போது நடைபெற்ற யுத்தத்தில் யூதர்கள் தோற்றுப் போயினர். அவர்கள் ஜெருஸலத்தில் இருந்து விரட்டப்பட்டனர். புதிதாக கிறிஸ்தவ மார்க்கத்தில் சேர்ந்தவர்கள் கூட்டமே பெரும்பான்மையாக இருந்தது. இவர்களுக்கு பவுல் அதிக சலுகைகளை அளித்திருந்ததால் பவுலின் பக்கமே இக்கூட்டம் சார்ந்து நின்றது. பெரும்பான்மையாகிவிட்ட இம் மக்கள் கூட்டம் ஜெருஸலத்தையும் பிற பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டது. இறுதியில் பவுலுடைய கோஷ்டிக்கு வெற்றி கிட்டிவிட்டது. பவுல் எடுத்துச் சொன்னதும் விளக்கிச் சொன்னதுமான மார்க்கம்தான் கிறித்தவ மார்க்கம் என்றாகி விட்டது. யூத-கிறித்தவர்களின் செல்வாக்கு மங்கியது. அவர்கள் பல இடங்களுக்கு சிதறிப் போய் விட்டார்கள்.

இந்த வெற்றியைப் பார்ப்பதற்கு பவுல் உயிருடன் இல்லாவிட்டாலும் அவர் எடுத்துக் கொண்ட கட்சியே கிறித்தவ மார்க்கம் என்று நிலை நிறுத்தப்பட்டு விட்டது. யூதர்களை ஒட்டிய கிறித்தவர் நாளடைவில் நலிவடைந்து இல்லாமலேயே மறைந்து விட்டார்கள்.
 

islamnewsbook web Copyright © 2009 Template is Designed by alaudeen